மகேஷ்குமார் அகர்வால். 
தமிழகம்

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும்: சென்னை காவல் ஆணையர்

செய்திப்பிரிவு

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும் என, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.12) மட்டும் 6,711 பேருக்குத் தமிழகம் முழுவதும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 2,105 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஏப். 13) சென்னை, தேனாம்பேட்டையில் காவல்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்துகொண்ட சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"கரோனா தொற்றுப் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் மக்களுக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது, அவர்களுக்கு கரோனா குறித்து தெரிந்திருக்கிறது. இருந்தாலும், மக்கள் சோர்வடைந்திருக்கின்றனர்.

பொதுமக்கள் வெளியே எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசத்தை அகற்றக் கூடாது. அப்போதுதான் நாம் கரோனா தொற்றைத் தடுக்க முடியும்.

காவல்துறை தரப்பில் இதுவரை சுமார் 3,300 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது புதிதாக சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.

காவல்துறையில் சுமார் 7,000 பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நேற்று மட்டும் 700 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் வைத்துள்ளனர். ஆனால், அதனை அணியமாட்டார்கள். நாம் எச்சரித்தால்தான் போடுகின்றனர். சென்னையில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன".

இவ்வாறு மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT