தமிழகம்

மறுசீரமைப்பு பணிகளை அறிவியல் பூர்வமாக நடத்த வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணம், மறுசீரமைப்பு பணிகளை அறிவியல் பூர்வமாக நடத்த வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை எவ்வாறு அறிவியல் முறையில் அணுக வேண்டும் என்பது குறித்து விளக்குவதற்காக தமிழ்நாடு அறிவியல் மையத்தின் சார்பில் நேற்று சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், தேசிய கல்வியியலாளர் விஞ்ஞானி டாக்டர் ஆர்.ராமானுஜம் கூறியதாவது:

தமிழகத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளும், பேரிழப்புகளும் தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒன்று. இப்போதைய நிவாரணமும், மறுசீரமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் அறிவியல் பூர்வமாக நடக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்கு கொடுத்த முக்கியத்துவமும், விளம்பரமும் விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வரும் கடலூருக்கு கொடுக்கப்படவில்லை என்பது மிகவும் வேதனையான விஷயம்.

தற்போது ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு இயற்கைப் பேரிடர் மட்டுமல்ல. மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட நகர் கட்டுமானம், நீர்வடிகால் மேலாண்மை போன்றவைகளாலும் ஏற்பட்டவை. இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டது அடித்தட்டு மக்கள்தான்.

பல இடங்களில் தண்ணீர் வற்றிவரும் நிலையில் தொற்று நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே அவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், நல்ல நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது. எனவே, எது குடிப்பதற்கான நல்ல தண்ணீர் என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனைக் கூடங் களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவது போன்று தனியார் பள்ளி மாணவர்களுக்கும் நோட்டுப் புத்தகங்களை இலவசமாக வழங்க வேண்டும். மழை குறித்து மக்களிடையே பரப்பப்படும் மூட நம்பிக்கைகளையும், பயத்தையும் போக்க விழிப்புணர்வை ஏற் படுத்தவும், மாணவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள அச்சம், மன உளைச்சலை போக்கும் வகையில் அவர்களுக்கு தொடர் தனி வகுப்புகள் எடுக்கவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு ராமானுஜம் கூறினார்.

இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.மோகனா, மாநில செயலாளர் உதயன், பொருளாளர் செந்தமிழ் செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT