ஏலகிரியில் உள்ள துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.
திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீடு, திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை மஞ்சம்கொள்ளை புதூர் பகுதியில் உள்ளது. அதேபகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் இங்கு காவலாளியாக பணிபுரிகிறார். ஓய்வு தேவைப்படும்போது துரைமுருகன் தனது குடும்பத்தினருடன் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில், காவலாளி பிரேம்குமார் நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள தனது வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று காலை வழக்கம்போல் பண்ணை வீட்டுக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் சிதறிக் கிடந்தன. பணம், நகை போன்ற விலை மதிப்பு மிக்க பொருட்கள் எதுவும் அங்கு இல்லாததால், திருட வந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் ஹார்டுடிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர். திருட வந்தவர்கள்தங்கள் அடையாளம் தெரியாமல் இருக்க அதை திருடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ஏலகிரி காவல் நிலையத்தில் பிரேம்குமார் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், ஏலகிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.