தமிழகம்

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு- கனிமவளத் துறை, வனத் துறை பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

விதிகளை மீறி கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்றுகூறி தொடரப்பட்டுள்ள வழக்கில்கனிமவளத் துறை மற்றும் வனத்துறை சார்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மதுராந்தகம் தாலுகா தொன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ஆர்.சதிஷ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘வனப்பகுதியை ஒட்டியுள்ள எங்கள் கிராமத்துக்கு அருகில் கல் குவாரி அமைக்க தனியார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகாரிகள் எந்தவொரு கள ஆய்வும் மேற்கொள்ளவில்லை. கல் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 300 மீட்டருக்குள் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளன. பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஏரி 70 மீட்டருக்குள் அமைந்துள்ளது.

எனவே இப்பகுதியில் கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே விதிகளை மீறி இப்பகுதியில் கல்குவாரி அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர் ஜோதிமணியன், கல் குவாரி அமைக்கும் பகுதியில் இறந்து கிடந்த மானின் புகைப்படத்தை நீதிபதிகளிடம் காண்பித்தார். அப்போது அரசு தரப்பில், இந்த வழக்கில் ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக கனிம வளத்துறை, வனத்துறை சார்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT