மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு தங்கியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி. 
தமிழகம்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் கரோனா தடையை மீறி தனியார் பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் கடந்த ஓராண்டாக மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு 8 மணி வரை கோயிலில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். “கரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகைக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது” என்று கோயில் இணை ஆணையர் ராமு சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அமாவாசைக்காக பக்தர்கள் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் சில தனியார் பேருந்துகள் நேற்று முழுவதும் போக்குவரத்துதுறையின் அனுமதியின்றி மேல்மலையனூருக்கு இயக்கப்பட்டன.

அரசின், கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காமல் பயணிகளை நின்று கொண்டு செல்ல இப்பேருந்துகளில் அனுமதிக்கப்பட்டதாக ‘இந்து தமிழ்’ வாசகர்கள் நம்மிடம் தெரிவித்தனர். இதுகுறித்து விழுப்புரம் வட்டார போக்குவரத்து அலுவலர்(பொறுப்பு) முருகேசனிடம் கேட்டபோது, “வரும் காலங்களில் இதனைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று முன் தினம் அனுமதியின்றி இயக்கப்பட்டதாக சொல்லப்படுவதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது. சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த பேருந்து நிர்வாகத்திடம் கேட்டாலும், பழுது நீக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்டது என்றே பதிலளிப்பார்கள். அப்படியே வழக்கு தொடர்ந்தாலும் இவ்வழக்கு நீதிமன்றத்தில் நிரூபிக்க இயலாத நிலையே ஏற்படும்” என்றார்.

கரோனா தொற்று காலத்திலும் மேல்மலையனூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களால் நேற்று முன்தினம் இரவு சுமார் 5 ஆயிரம் பேர் இரவு தங்கி காலையில் சொந்த ஊருக்கு திரும்பியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஊஞ்சம் உற்சவம் நடை பெறாவிட்டாலும் கோயிலில் பிற வழிபாடுகள் அமாவாசை நாளில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT