பெரியபாளையம் அருகே கொசஸ் தலை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டிலேயே தடுப்பணை உடைந்ததால் அதன் கட்டுமான தரம் குறித்து விவசாயிகள் கேள்வி எழுப்பி யுள்ளனர்.
பெரியபாளையம் அருகே உள்ளது திருக்கண்டலம். இங்கு, கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கடந்த 2013-14-ம் ஆண்டில் ரூ.32.90 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை தமிழக அரசால் கட்டப்பட்டது. திருக்கண்டலம், அழிஞ்சிவாக்கம், அத்தங்கிகாவனூர், ஆரிக்கம் பேடு, சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங் களின் நிலத்தடி நீரை மேம்படுத்து வதற்காக 160 மில்லியன் கனஅடி நீரை தேக்கி வைப்பதற்காக இந்த தடுப்பணை கட்டப்பட்டது. இருபுறமும் 6 ஷட்டர்களுடன் 175 மீட்டர் நீளம் மற்றும் ஐந்தரை மீட்டர் உயரத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பெய்து வந்த கனமழையால் ஏரிகள், குளங்கள் நிரம்பின. ஆரணி, கூவம், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழை மற்றும் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரி நீரால் கடந்த மாதம் 17-ம் தேதி வினாடிக்கு சுமார் 85 ஆயிரம் கன அடி நீர் திருக் கண்டலம் தடுப்பணை பகு தியில் கொசஸ்தலை ஆற்றில் வந்தது.
அப்போது நீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் தடுப் பணையின் இடதுபுற கரைப் பகுதியில் உள்ள பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால், தடுப்பணை அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் நீரில் மூழ்கின.
இதனிடையே கடந்த 3-ம் தேதி தடுப்பணை பகுதியில் வினாடிக்கு சுமார் 94 ஆயிரம் கனஅடி நீர் கொசஸ்தலை ஆற்றில் வந்தது. இதன்காரணமாக தடுப்பணையில் கடந்த 17-ம் தேதி இடிந்து விழுந்த கரையின் பக்கவாட்டு சுவர் முழுமையும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டது. தடுப்பணையின் இடதுபுற பகுதி ஷட்டர் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. மற்றொரு ஷட்டர் பகுதி உள்வாங்கியது. சுவர் பகுதி 30 மீட்டர் தூரத்துக்கு உடைந்தது.
விவசாயிகள் புகார்
இதனிடையே தடுப்பணையின் கட்டுமானம் தரமற்று இருந்த தாலேயே அதில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ள தாகவும் அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ரவி கூறும்போது, ‘ஆங்கிலேயேர் காலத்தில் கட்டப்பட்ட பல அணைகள் இன்னமும் சிறு விரிசல் கூட இல்லாத நிலையில், கட்டிய ஓராண்டுக்குள் அணை உடைகிறதென்றால், நிச்சயம் முறையாக நிதியை செலவிட்டு கட்டுமானப் பணி நடைபெறவில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார். அணையும் இடிந்து, தண்ணீரும் வீணாக வெளியேறியதால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறும்போது, ‘எதிர்பார்த்த அளவை விட அதிகமான நீர்வரத்தால்தான் அணை பாதிக்கப்பட்டது. கொசஸ்தலை ஆற்றில் நீர் முற்றிலும் வடிந்த பிறகே தடுப்பணையில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சீரமைக்கும் பணி தொடங்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.