சென்னை உள்ளிட்ட தமிழக கடலோர மாவட்டங்களில் 17,18 தேதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, லட்சத்தீவுகள் பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை நிலவரப்படி, ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, திருவாரூரில் 12, திருத்துறைப்பூண்டியில் 8, கொடைக்கானல் மற்றும் நன்னிலத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.
இது தவிர, கோவை, நீலகிரி, தஞ்சை, சேலம், ஈரோடு, நெல்லை மாவட்டங்களிலும் ஆங்காங்கே மழை பெய்துள்ளது.
தொடர்ந்து, தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.
இந்நிலையில், 16-ம் தேதி, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை எதிர்பார்க்கலாம் என்றும் 17, 18 தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்கள், உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. 19-ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.