முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்காக ஜனவரி 18-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
‘ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, பணபலம் - என்ன செய்தார் ஜெயலலிதா?’ என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் கடந்த மாதம் செய்தி வெளியானது. உள்நோக்கத்துடன் முதல்வர் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பும் வகையில் செய்தி வெளியிட்டதாகக் கூறி, அந்த வார இதழின் ஆசிரியர், வெளியீட்டாளர், பதிப்பாளர் ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் தண்டிக்க வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.
அதேபோல, ‘4 ஆண்டு ஆட்சி யில் சாதித்தது என்ன?’ என்ற தலைப்பில் முரசொலி பத்திரிகையில் வெளியான திமுக தலைவர் கருணாநிதியின் கேள்வி - பதில் அறிக்கை உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது என்று கூறி அப்பத்திரிகையின் ஆசிரியர் முரசொலி செல்வம், கட்டுரை எழுதிய கருணாநிதி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.
இந்த 2 வழக்குகளும் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. திமுக தலைவர் கருணாநிதி, முரசொலி செல்வம் ஆகியோர் ஜனவரி 18-ம் தேதியும், வார இதழின் ஆசிரியர் உள்ளிட்ட 3 பேர் பிப்ரவரி 1-ம் தேதியும் நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.