அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்ததாக அமைச்சர் நிலோபர் கபீலின் உதவியாளர் மீது இளம்பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் வந்து காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, வெள்ளக்குட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசுதா (30). முதுகலைப் பட்டதாரியான இவர் தனது கைகுழந்தையுடன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்துக்கு வந்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘வாணியம்பாடி வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்த நான் அரசு வேலைக்காக முயற்சி எடுத்து வந்தேன். இந்நிலையில், 2017-ம் ஆண்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீலின் தனி உதவியாளரான வாணியம்பாடி, சென்னாம்பேட்டையைச் சேர்ந்த பிரகாசம் என்பவர் எனக்கு நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். அப்போது, அரசு வேலைக்காக முயற்சி எடுத்து வருவதை அறிந்த அவர், தொழிலாளர் நலத்துறையினர் இளநிலை உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அமைச்சர் நிலோபர் கபீலிடம் கூறி அந்த வேலையை எனக்கு வாங்கித் தருவதாகவும் கூறினார்.
இதற்காக ரூ.15 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார். அதன் பேரில், நான் என் தங்க நகைகளை அடகு வைத்தும், பல இடங்களில் கடன் வாங்கியும் 2017-ம் ஆண்டு ஒரே கட்டமாக ரூ.15 லட்சத்தை பிரகாசத்திடம் கொடுத்தேன். பணத்தை வாங்கிக்கொண்ட அவர் 2 ஆண்டுகள் ஆகியும் அரசு வேலை வாங்கித் தரவில்லை. இதுகுறித்துப் பலமுறை அவரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது அதற்கான முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறினார்.
அமைச்சர் நிலோபர் கபீலை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்ற கேட்டபோது கூட அவர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், நான் வாங்கிய கடன் தொகைக்கு என்னால் வட்டி செலுத்த முடியவில்லை, அடகு வைத்த தங்க நகைளும் மூழ்கும் நிலைக்குச் சென்றதால், நான் கொடுத்த பணத்தை பிரகாசத்திடம் திருப்பிக் கேட்டேன். ஆனால், அவர் தர மறுத்தார். இதுகுறித்து 2019-ம் ஆண்டு வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
இதையறிந்த பிரகாசம் 2019-ம் ஆண்டு முதல் தவணையாக ரூ.7 லட்சம் கொடுத்தார். பாக்கியுள்ள ரூ.8 லட்சம் தரவில்லை. ஓராண்டு கழித்துத் தருவதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு பாக்கி பணத்தைக் கேட்டபோது அவர் 2 காசோலைகளைக் கொடுத்தார். அதை வங்கியில் செலுத்தியபோது பிரகாசம் சேமிப்புக் கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பி வந்துவிட்டது.
இதுகுறித்து அவரிடம் தெரிவித்தபோது, ரூ.8 லட்சம் பணத்தைத் தர முடியாது எனக் கூறி எனக்கும் என் குடும்பத்தாருக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே, அவர் மீது வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்தி எனக்குச் சேர வேண்டிய பணத்தை மீட்டுத் தர வேண்டும்’’.
இவ்வாறு அந்த மனுவில் ஜெயசுதா குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.