கரோனா வைரஸை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வதாக வருத்தம் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, தகுதியுள்ளவர்கள் உடனடியாக தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கரோனா பரவல் குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
கரோனா வைரஸ் பரவல் தமிழகத்தில் இப்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் பல மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாம் கடுமையாக பணியாற்ற
வேண்டும்.
இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடிய வைரஸ் தொற்று நோய். இந்த நோய் பாதிக்கப்பட்ட பலர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கின்றார்கள்.
இதையெல்லாம் பொதுமக்கள் உன்னிப்பாக கவனித்து அரசு அறிவித்த வழிகாட்டுதல் முறைகளை தவறாமல் கடைபிடித்து செயல்படுத்த வேண்டுமென்று பொதுமக்களை கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.
அதோடு காய்ச்சல் முகாம்கள் அதிகமாக நடத்துவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது சென்னை மாநகரத்தில் 150 முதல் 200 காய்ச்சல் முகாம்கள் செயல்பட்டு வருகின்றன, 400 ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கின்ற பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி தென்பட்டால் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல சென்னை மாநகரத்திலும், பிற மாநகரப் பகுதிகளிலும் நம்முடைய அரசால் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பணியாளர்களின் மூலமாக வீடு, வீடாகச் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும்போது, வீட்டில் இருப்பவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், அவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தினால்தான் கரோனா வைரஸ் பரவலை நாம் கட்டுப்படுத்த முடியும். அதோடு, பொது இடங்களில் மக்கள் அதிகமாகக் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
மேலும், பொது இடங்களில் மக்கள் கூடும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அதேபோல, உணவுக் கூடங்கள், தொழிற்சாலைகள், இறைச்சிக் கூடங்கள், மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் போன்ற இடங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். அப்படி பின்பற்றினால் தான் கரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டுவர முடியும். இது ஒவ்வொருவருக்கும்
உள்ள கடமை.
அந்த கடமையுணர்வோடு பணியாற்ற வேண்டும். குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் கூட, சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறக்க நேரிட்டால் அந்த குடும்பத்தில் இருப்பவர்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று கண்கூடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அண்மையில் கூட, தேர்தல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சியைச்
சேர்ந்த வேட்பாளர் கரோனா வைரஸ் தொற்றால் இறந்திருக்கின்றார். இதை பொதுமக்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். பொதுமக்கள் இந்த நோயை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்தக் கொடிய நோயினால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு இறந்திருக்கின்றார்கள்.
ஆகவே, தமிழ்நாட்டை பொறுத்தவரை, ஒருவர் கூட இறக்கக்கூடாது, அதை அரசு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும், அனைவரும் நோய்த் தொற்றிலிருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில்தான் அரசு தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. எனவே, அரசு அறிவித்த வழிமுறைகளை மக்கள் தவறாமல் பின்பற்றி, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.
மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கொள்வது என்னவென்றால், உங்கள் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் எவ்வளவு
வேதனைப்படுவோம் என்று ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும், சிந்தித்தால் நிச்சயமாக அரசு அறிவித்த வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றும்.
ஆகவே, நான் பொதுமக்களை தொடர்ந்து அன்போடு வேண்டி கேட்டுக் கொள்வது, அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். பொருட்களை வாங்குகின்றபோது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். வெளியிலிருந்து வீட்டிற்கு சென்றவுடன், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவ வேண்டும். பொதுக் கழிப்பறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் யாருக்காவது தொற்று அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.
அதோடு, அரசு அலுவலர்கள், அரசு ஊழியர்கள் கண்டிப்பாக இரண்டு வாரத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதேபோல பொதுமக்கள் அனைவரும் தங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
தொழிற்சாலைகள், உணவுக்கூடங்கள், மார்க்கெட் போன்ற பகுதியிலுள்ள நிறுவனத்தின் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யுங்கள், அரசு அதற்கு தயாராக இருக்கின்றது.
அந்தந்த தொழிற்சாலையைச் சேர்ந்த நிர்வாகம் அரசு மருத்துவமனையை அணுகினால் அங்கேயே வந்து தடுப்பூசி செலுத்துவதற்கு தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. ஆகவே, பொதுமக்கள் அனைவரும் தவறாமல் மருத்துவமனைக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.