தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள தகவலின்படி, தென் தமிழகம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு ஏற்படுகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை தொடரும். நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக நேற்று மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இன்றும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.
கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது கோடை மழை தொடங்கியுள்ளது. இந்த மழை அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் குழித்துறை, உசிலம்பட்டி பகுதிகளில் தலா 4 செ.மீ. மழை, ஜெயங்கொண்டம், திருபுவனம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை, ராமநாதபுரம், பிளவக்கல், கொடைக்கானலில் தலா 2 செ.மீ., ஆண்டிபட்டி, ஆழியாறு, கெட்டி ஆகிய பகுதிகளில் தலா ஒரு செ.மீ. மழை பெய்துள்ளது.
எனினும் சென்னைக்கான மழை நிலவரம் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதேபோல கடலோர மாவட்டங்களில் மழை பெய்யுமா என்பது குறித்தும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.