ஸ்ரீதர் வாண்டையார். 
தமிழகம்

கும்பகோணம் அதிமுக வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையாருக்கு கரோனா தொற்று

வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம் அதிமுக வேட்பாளரும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவருமான ஸ்ரீதர் வாண்டையாருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் (65). கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்துக்கு உட்பட்ட கவரப்பட்டு பகுதியைச் சேர்ந்த இவர், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ளார். இவர் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் கும்பகோணம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். அப்போது, இவர் கும்பகோணம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

வாக்குப்பதிவு நடந்த 6-ம் தேதியன்று ஸ்ரீதர் வாண்டையார், பல்வேறு இடங்களுக்குச் சென்று வாக்குப்பதிவைப் பார்வையிட்டார். இந்நிலையில் அண்மையில் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், கரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், ஸ்ரீதர் வாண்டையாருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.

இதையடுத்து, தஞ்சாவூர் அருளானந்த நகரில் உள்ள தனது மைத்துனரான மருத்துவர் வி.வரதராஜன் வீட்டில் ஸ்ரீதர் வாண்டையார் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் எஸ்.ஜெயக்குமாருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பெருந்துறை அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேபோல ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செல்வப்பெருந்தகைக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர்எம்.எஸ்.எம்.ஆனந்தன், காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாரிமுத்து ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தேர்தல் பிரச்சாரங்களில் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT