சித்திரைத் திருவிழாவை நடத்தக் கோரி மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாட்டுப்புறக் கலைஞர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
கரோனா பரவலால் கடந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா ரத்தானது. கோயில் நிர்வாகம் சார்பில் காணொளியில் விழா ஒளிபரப்பப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டாவது சித்திரைத் திருவிழா நடைபெறும் என மதுரை மக்கள் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதலே கரோனா பரவல் தமிழகத்தில் மீண்டும் வேகமெடுத்தது. தமிழகத்தில் அன்றாட பாதிப்பு 6000 ஐ கடந்துவிட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டும் கடந்த ஆண்டைப் போலவே சித்திரைத் திருவிழா பொதுமக்கள் பங்கேற்பு இன்றி நடைபெறவிருக்கிறது.
இதனால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி மதுரை தமுக்கம் மைதானத்தில் தமிழ் அன்னை சிலை முன் திரண்டனர்.
ஆண்டுக்கு ஒரு முறை தங்களுக்குக் கிடைக்கும் வாழ்வாதாரம் கூட கரோனா கட்டுப்பாடுகளால் முடங்கிவிடுவதாகக் கோஷங்கள் எழுப்பினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் வந்து கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தமுக்கம் மைதானம் அமைந்துள்ள கோரிப்பாளையம் பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்பதால் சில நிமிடங்களிலேயே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால், போராட்டம் நடத்திய நாட்டுப்புறக் கலைஞர்களை போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
இந்நிலையில், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி என பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டம் பரவி வருகிறது.
தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் வாரியத்தில் புதிதாக பதிவுசெய்த தவில், நாதஸ்வரம், தெருக்கூத்து கலைஞர்களுக்கு ரூ.2,000 சிறப்பு நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டம் வலுத்து வருகிறது.