கட்டுமானப் பணியிடங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க தமிழக தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் மற்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டுமான பணியிடங்கள் மற்றும் தொழிலாளர் குடியிருப்புகளில் சுகாதார முன்னெச்செரிக்கை நட வடிக்கைகளை எடுக்க, தமிழக தொழிலாளர் நலத்துறை செயலர் மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் ஆகியோர் உத்தரவிட்டனர். இதன்படி, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர்களின் தலைமையில் 6 குழுக்கள் அமைக்கப்பட்டன.
இக்குழுவினர் 3 மாவட்டங் களிலும் கடந்த 16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கட்டிடம் மற்றும் கட்டுமான பணி நடக்கும் இடங் களில் டெங்கு மற்றும் தொற்று நோய்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்தினர்.
அப்போது நடத்திய ஆய்வின் போது, கட்டுமானப் பணியிடங் கள், தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள தொட்டிகள், லிப்ட் குழிகள், பிளாஸ்டிக் டிரம்கள், செப்டிக் டேங்க்குகள், மாடியில் உள்ள திறந்த வெளி தொட்டிகள், ரப்பர் டயர், பைகள், கப்புகள் உள்ளிட்டவற்றை கண்டறிந்து, அவற்றில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றினர்.
மேலும் அப்பகுதியில் நீர் தேங்காமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்காக நிலவேம்பு கசாயம் தயாரித்து அருந்தும் முறையும் விளக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்க நிர்வாகத் தினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. 277 கட்டுமான பணியிடங்கள் 84 தொழிலாளர் குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டு 21 ஆயிரத்து 889 தொழிலாளர்கள் பயனடையும் வகையில் விழி்ப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதன்மூலம் கட்டுமானப் பணியிடங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தொழிலக பாதுகாப்பு குழுவினருடன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்கக அலுவலர்களும் இணைந்து ஆய்வு மேற்கொண்ட தாக அதில் கூறப்பட்டுள்ளது.