திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நேற்று மணல் லாரி மோதியதில் நொறுங்கிய காரை மீட்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர். 
தமிழகம்

பல்லடம் அருகே 2 கார்கள் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு: மது போதையில் மணல் லாரியை இயக்கிய ஓட்டுநர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கார்கள் மீது எதிரே வந்த லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவர், மனைவி, மகள் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த வல்லகுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(37). மென்பொருள் பொறியாளர். இவரது மனைவி சரண்யா(30), மகள் தனிகா(7). இவர்கள் மூவரும் தங்களது காரில் நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் நோக்கிச் சென்றனர். காரை கார்த்திக் ஓட்டிச் சென்றார்.

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வளைவில் சென்றபோது, அதிவேகமாக எதிரே வந்த மணல் லாரி, கார்த்திக் வந்த கார் மீது மோதியதுடன், அதன் பின்னால் வந்த கார் மீதும் மோதியது.

இடிபாடுகளில் சிக்கினர்

இந்த விபத்தில் கார்த்திக் ஓட்டிச் சென்ற கார், லாரியின் முன் பகுதியில் சிக்கி நொறுங்கியது. இதில் கார்த்திக், மனைவி சரண்யா, மகள் தனிகா ஆகியோர் பலத்த காயங்களுடன் இடிபாட்டில் சிக்கி உயிருக்குப் போராடினர்.

மீட்க முடியவில்லை

அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இடிபாடுகளில் சிக்கிய காரை மீட்க அவர்களால் முடியவில்லை. பின்னர்உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். இவர்களோடு பொதுமக்களும் இணைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கப் போராடினர்.

ஆனால் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூவரது உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விபத்தில் சிக்கிய கார் சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மது போதையில் லாரி ஓட்டுநர்

இச்சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார்வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். லாரி ஓட்டுநர் கதிரவன் குடிபோதையில் இருந்துள்ளார். லாரியை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கி விபத்தை ஏற்படுத்தியதோடு சம்பவம் நடந்த உடன் அங்கிருந்து தப்பி காமநாயக்கன் பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை போலீஸார் கைது செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT