உடுமலை அருகே உள்ள சேரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜான்பால். தனியார் பள்ளி ஆசிரியர். இவரது மனைவி கவுதமி. இவர்களது மகன் ஜா.விதுஷன் (3). தமிழ் வருடங்களின் பெயர்களை கூறுதல் உள்ளிட்ட பல வகைகளில் சிறுவனின் திறனை பரிசோதித்த ‘இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் அவரது திறமையை உலக சாதனையாக அங்கீகரித்து சான்றிதழ் வழங்கி கவுரவித்துள்ளது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் கூறியதாவது: எங்களது மகன் 3 வயதுக்கு முன்பே 60 தமிழ் வருடங்களை 1 நிமிடம்6 விநாடிகளில் சொல்லி முடித்தார்.மேலும் திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், எட்டுத்தொகை நூல்களின் பெயர்களை சொல்வதோடு 15-க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகள், வாரத்தின் நாட்கள், 8 கோள்களின் பெயர்கள், 12 மாதங்களின் பெயர்கள், எண்களின் பெயர்கள் போன்றவற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கூறுவான்.
15-க்கும் மேற்பட்ட வாகனங்களின் பெயர்கள்,வீட்டு உபயோகப் பொருட்கள், விலங்குகள், பறவைகள், வண்ணங்கள், வடிவங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்களின் பெயர்களையும் அழகாக மழலை தழும்பும் மொழியில் சொல்கிறான். இதனை அங்கீகரித்து இந்திய சாதனைப் புத்தகம் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கிகவுரவித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.