தமிழகம்

தமிழக அரசுப் பேருந்துகளில் பழுதடைந்த மின்னணு கருவிகளால் டிக்கெட்டுகள் தருவதில் தாமதம்

செய்திப்பிரிவு

அரசுப் பேருந்துகளில் மின்னணு கருவி மூலம் டிக்கெட் வழங்குவது சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், நடத்துநர்கள் பழையபடி டிக்கெட்டை கையால் கிழித்து கொடுத்து வருகின்றனர்.

அரசுப் போக்குவரத்து கழகங்களில் பயணிகளுக்கு டிக்கெட் அளிக்கும் வகையில் பிரத்யேக கருவிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டன. இந்த கருவி மூலம் டிக்கெட் விவரங்கள், வசூல் தொகை, பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.

இதுதவிர, பயணிகளின் எண்ணிக்கை, பயண தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா என்பன போன்ற விவரங்களைப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.

அவற்றில் தற்போது பெரும்பாலான கருவிகள் பழுதாகியுள்ளன. இதனால், பயணிகளுக்கு டிக்கெட் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் மீண்டும் டிக்கெட்டுகளை கிழித்துக் கொடுக்கும் முறைக்கு நடத்துநர்கள் மாறியுள்ளனர்.

இதுதொடர்பாக நடத்துநர்கள் சிலர் கூறும்போது, ‘‘பெரும்பாலான கருவிகள் பழுதாகியுள்ளன. அவற்றை தொடர்புடைய நிறுவனங்கள் உடனுக்குடன் சரிசெய்து தருவதில்லை. தற்போதுள்ள சில டிக்கெட் கருவிகளிலும், டிக்கெட் அச்சாக தாமதம் ஏற்படுகிறது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, இந்த வேகம் போதாது. எனவே, டிக்கெட்டுகளை கையால் கிழித்துக் கொடுக்கிறோம்’’ என்றனர்.

இதுதொடர்பாக அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. எனவே, தேர்தல் முடிவுக்குப் பிறகு புதிதாக மின்னணு கருவிகளை வாங்கவுள்ளோம்’’ என்றனர்.

SCROLL FOR NEXT