இதுவரை எந்த மாநிலங்களுக்கும் இல்லாத வகையில் தமிழகத்துக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 50 மீட்புக் குழுக்கள் இறக்கி விடப்பட்டுள்ளன. இவர்கள் வெள்ளத்தில் இருந்து இன்று மாலை வரை 16,547 பேரை மீட்டுள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் இயற்கை பேரிடர்களில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்டிஆர்எப் மீட்புப் பணிகளுக்கு களம் இறக்கி விடப்படுகிறது.
வரலாற்றில் இல்லாத வகையில் முதன் முறையாக சுமார் 1,600 வீரர்கள் அடங்கிய 50 மீட்புக் குழுக்கள் ஒரே மாநிலத்தில் இறக்கி விடப்பட்டுள்ளன. இவர்கள், 27,210 உணவுப் பொட்டலங்கள் மற்றும் 25,921 குடிநீர் பாட்டில்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு விநியோகித்துள்ளனர். இதில் இன்று ஒருநாள் மட்டும் 220 பேர் மீட்கப்பட்டு 7,745 உணவுப் பொட்டலங்கள் மற்றும் 9,919 குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ’தி இந்து’விடம் தேசிய பேரிடர் நிவாரணப் படையின் நிர்வாகப் பிரிவு டி.ஐ.ஜியான ஜே.கே.எஸ்.ரவாத் கூறுகையில், ''சென்னை கீழ்ப்பாக்கத்தில் 24 மணி நேரம் இயங்கும் அவசரகால ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 24 மணிநேர அவசர உதவி தொலைபேசி எண்கள், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப் எண் ஆகியவற்றில் கிடைக்கப் பெறும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பிஹார் வெள்ளம் மற்றும் குஜராத் பூகம்பம் ஆகிய இயற்கை பேரிடர்களிலும் இவ்வளவு அதிகமான குழுக்கள் சென்றதில்லை'' என தெரிவித்தார்.
இந்த மீட்புப் பணிகளை என்டிஆர்எப்பின் டெல்லி தலைமையகத்தில் இருந்து அதன் இயக்குநர் ஜெனரல் ஓ.பி.சிங் நேரில் மேற்பார்வையிட நேற்று மாலை சென்னை வந்திறங்கினார். இப்படையில் சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருகின்றன.