திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அரக்கோணம் அருகே முன் விரோதம் காரணமாக நடைபெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தாரை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோகனூர் பகுதியைச் சேர்ந்த அர்ஜூனன், செம்பேடு பகுதியைச் சேர்ந்த சூர்யா ஆகியோர் முன் விரோத தகராறில் கொலை செய்யப்பட்டனர்.
அவர்களது உடல்களைப் பெற மறுத்த குடும்பத்தார், உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையை அரசு ஏற்பதாக உறுதியளித்தின் பேரில் அர்ஜூனன் மற்றம் சூர்யா ஆகியோரது உடல்கள் நேற்று பெற்றுக்கொண்டனர். உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு அவர் ஆறுதல் கூறினார்.
இதைதொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் முறையான விசாரணையை நடத்த வேண்டும். விசாரணை முறையாக நடைபெறாததால் பல்வேறு வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் எளிதாக தப்பிவிடுகின்றனர்.
அரக்கோணம் இரட்டைக்கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலம் முழுவதும் சாதி வெறிக்கொண்ட செயல்பாடுகள் மீதும் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.
அரக்கோணம் இரட்டைக் கொலை வழக்கை காவல் துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும். அலட்சியம் காட்டக்கூடாது. இந்த வழக்கை விரைந்து முடிக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகள் தப்பித்து விடக்கூடாது. குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டனையை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அரசு துறையில் வேலை வழங்க வேண்டும்’’ என்றார்.
இதைதொடர்ந்து, அரக்கோணத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்ற மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அங்கு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு, செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வாக்கு எண்ணிக்கையை மே 2-ம் நடைபெறுவது வேதனையளிக்கிறது. தேர்தல் முடிந்து ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணப்படுவதால் இந்த ஒரு மாதத்துக்கு அரசு செயல்படாமல் இருப்பதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா தடுப்பூசி ஒரு வாரத்துக்கு மேல் இருக்காது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும். கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தும் மையங்கள் அதிகரிக்க வேண்டும். கரோனா சிகிச்சைப்பிரிவில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்களை அரசு நியமிக்க வேண்டும்.
வேளச்சேரியில் தேர்தல் விதிமீறில் நடைபெற்றுள்ளதற்கு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை. யார் வேண்டுமானாலும் வாக்குப்பதிவு பெட்டிகளை எடுத்துச்செல்லலாம் என்றால் தேர்தல் ஆணையம் அலட்சியமாக செயல்படுகிறது என்பதை மக்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ வல்லிபுத்தூர் காங்கிரஸ் கட்சி வேப்பாளர் மறைவு வேதனையளிக்கிறது. இந்த தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். ஆளும் கட்சியினர் மீது புகார் கொடுத்தால் அவர்கள் மீது தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்வதாக கூறுகிறார்கள், ஆனால் நடவடிக்கை எடுப்பதில்லை. பாஜக போட்டியிடும் தொகுதியில் ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 170 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும், தமிழகத்தில் பாஜக, அதிமுக கூட்டணியை மக்கள் வெறுகின்றனர்’’. இவ்வாறு அவர் கூறினார்.