தமிழகம்

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மரணம்: வாக்கு எண்ணிக்கை நடக்குமா?- தலைமை தேர்தல் அதிகாரி பதில்

செய்திப்பிரிவு

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் நுரையீரல் தொற்று காரணமாக மரணம் அடைந்த சூழ்நிலையில் அங்கு தேர்தல் முடிந்த நிலையில் அத்தொகுதிக்கு மே.2 அன்று வாக்கு எண்ணிக்கை நடக்குமா? என்கிற கேள்விக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதில் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினரும் வழக்கறிஞரான மாதவராவ் போட்டியிட்டார்.

வேட்புமனுத் தாக்கல் செய்த ஓரிரு நாளில் மாதவராவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது, ஆனாலும் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தின்போதே மூச்சுத்திணறல் காரணமாக மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக அவரது மகள் திவ்யா பிரச்சாரம் செய்து வந்தார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வரும் மே 2 அன்று வாக்கு எண்ணிக்கையை அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக கவலைக்கிடமான நிலையில் இருந்த மாதவராவ் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாதவராவ் கடந்த 1986-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்டு வந்தார். மாணவர் காங்கிரஸ் உறுப்பினராகவும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸின் செயலாளராகவும், துணைத்தலைவராகவும், தேசிய காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் குழு ஆலோசகர், சட்ட ஆலோசனைக்குழு துணைச் செயலாளர் உட்பட பல பதவிகளை வகித்தார்.

வரும் மே 2 வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை குறித்து சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, ''தேர்தல் முழுமையாக முடிந்துவிட்டது. வேட்பாளர் உயிரிழந்தாலும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அதில் எதிர் வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராவார். ஒருவேளை மாதவராவ் வெற்றி பெற்றால் அந்தத் தொகுதி வேட்பாளர் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்படும்.

பின்னர் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும். பின்னர் தலைமை தேர்தல் ஆணையம் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த தேதி அறிவித்த பின்னர் அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT