கரோனா தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டுமென புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில், இதனை தடுக்க புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், புதுச்சேரி முழுவதும் 100 இடங்களில் இன்று (ஏப். 11) முதல் வருகின்ற 14-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று 100 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா தொடஙகி நடைபெற்று வருகிறது. இதில் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி எடுத்துக் கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, பாக்கமுடையான்பட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கரோனா தடுப்பூசி திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முகாமை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:‘‘
கரோனா தடுப்பூசி திருவிழாவுக்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வருகிறார்கள். எதை நினைத்து 100 இடங்களில் கரோனா தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தோமோ, அதற்கேற்ப அந்தந்த பகுதி மக்கள், தடுப்பூசி எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்ற நம்பிக்கையோடு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்கின்றனர்.
இதற்காக புதுச்சேரி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இந்தத் தடுப்பூசி திருவிழாவை தொடங்கி வைக்கும்போது, ஒருவருக்கு ஒருவர் என்ற ஒரு திட்டத்தை கூறியுள்ளார். ஒருவருக்கு தடுப்பூசி போட ஒருவர் உதவி செய்ய வேண்டும். ஒருவருக்கு சிகிச்சை அளிக்க ஒருவர் உதவி செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒருவர் பாதுகாப்பாக இருப்பதற்கு முகக்கவசம் அணிய உதவி செய்ய வேண்டும்.மைக்ரோ அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை உடனடியாக கண்டுபிடித்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாமெல்லாம் ஒருவருக்கு ஒருவராக உதவி செய்து கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கோரிக்கை. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் அளவில் சிறப்பான முறையில் தடுப்பூசி திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வசதியாக தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்வதாக பொதுமக்கள் நேரிடையாக என்னிடம் சொன்னது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக அனைத்து துறையினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு விதிப்பதை விட மக்களே கட்டுப்பாடாக இருக்க வேண்டும். எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே வரக் கூடாது.
அவர்கள் வெளியே வந்தால் மற்றவர்களுக்கும் நோயைப் பரப்புபவராக ஆகி விடுகிறார். எனவே, அவர்களை குடும்பத்தினர் பாதுகாப்பாக பார்த்து கொள்ள வேண்டும். இதையும் மீறி வெளியே வருபவர்களை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு மட்டுமே எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. இதில் பொதுமக்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்க வேண்டும். அதேபோல், கரோனா தொற்று ஏற்பட்டவர்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும். கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் மற்றவர்களுக்கு தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்று தங்களை தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கரோனா நோயாளிகளுக்கு தனியாக படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.’’இவ்வாறு ஆளுநர் தமிழிசை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஆளுநரின் ஆலோசகர் சந்திரமவுலி, சுகாதாரத்துறை செயலர் அருண், கல்வித்துறை செயலர் அசோக்குமார், புதுச்சேரி மாநில சுகாதார திட்ட இயக்குநர் ஸ்ரீராமலு மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.