சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த வெங்கடேசன், சீதா தம்பதி யரின் மகன் மணிகண்டன் (19). குடும்ப சூழ்நிலையால் மணிகண்டன் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த 26-ம் தேதி மாலையில் செங்கல்பட்டு அருகே சாலையை கடக்க மணிகண்டன் முயற்சி செய்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் பலத்த காயமடைந்தார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மணிகண்டனை மீட்ட அப்பகுதி மக்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார். மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய விரும்புவதாக பெற்றோர் தெரிவித்தனர். இதையடுத்து டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை செய்து மணிகண்டனின் உடலில் இருந்து சிறுநீரகங்கள், கல்லீரல், இதயத்தை எடுத்தனர். நுரையீரல் சேதமடைந்து இருந்ததால், அதனை டாக்டர்கள் எடுக்கவில்லை.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிக ளுக்கு பொருத்தப்பட்டன. இதயம் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிக்கும் பொருத்தப் பட்டன. மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானத்தால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.