தமிழகம்

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்டம்தோறும் கண்காணிப்பு மையங்கள் தொடங்கப்படும்: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காணிப்பு மையங்களை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் லேசான அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை திருவல்லிக்கேணி விக்டோரியா மாணவர் விடுதியில் கரோனா கண்காணிப்பு மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) ஆல்பி ஜான் வர்கீஸ், துணை ஆணையர் (வருவாய் மற்றும் நிதி) ஜெ.மேகநாதரெட்டி, ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ஜெயந்தி, மாநகர நல அலுவலர் எம்.ஜெகதீசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா கண்காணிப்பு மையங்களை தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 13 இடங்களில் கரோனா கவனிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகரிக்க காரணம் உருமாறிய கரோனாவா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் அதிக அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். கூடுதலாக தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, நாமக்கல், தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தடுப்பு பணி சவாலாக உள்ளது. அந்த மாவட்டங்களில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்களை பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் இரட்டை கரோனா பாதிப்பு இருக்கிறதா என்ற ஆய்வு முடிவு இன்னும் வரவில்லை.

கரோனா தொற்று பரவலால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கிறது. 3 வாரம் தொடர்ந்து முகக்கவசம் அணிந்தால் எந்த உருமாறிய கரோனாவாக இருந்தாலும் அதன் சங்கிலி உடைக்கப்படும். சென்னையில் மருத்துவமனைகள் மற்றும் கண்காணிப்பு மையங்களில் 18,852 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. இதில், சுமார் 6 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். வீட்டுக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதுவரை தமிழகத்துக்கு 54.85 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. 36 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு தடுப்பூசி குறித்த அச்சமே காரணமாக உள்ளது. அதனால்தான் தடுப்பூசி திருவிழா நடத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்த நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் சிலருக்கு தொற்று ஏற்படுவது உண்மைதான். முதல் தவணை தடுப்பூசி போட்டவுடன் நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடாது. இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டபின் 14 நாட்களுக்கு பின்னரே நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். தடுப்பூசி போட்டவர்களுக்கு கரோனா வந்தாலும் பெரிய பாதிப்பு ஏற்படாது. அதனால், பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். சித்தா கண்காணிப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT