தமிழகம்

‘தங்க இலை’ விருது போட்டியில் 133 வகை தேயிலைத் தூள் ஆய்வு

செய்திப்பிரிவு

தென் மாநிலங்களில் உள்ள சிறு, பெரிய தேயிலைத் தொழிற்சாலைகள் உற்பத்தி செய்யும் தேயிலைத் தூளுக்கு சர்வதேச சந்தையில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கம் மற்றும் தேயிலை வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் ‘கோல்டன் லீப் இந்தியா’ விருதுக்கான போட்டி நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 17-வது ‘கோல்டன் லீப் இந்தியா’ விருதுக்கான போட்டி நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் நேற்று (ஏப்.10) தொடங்கியது. நீலகிரி, கேரளா, வயநாடு, வால்பாறை, மூணாறு, கர்நாடகா ஆகிய ஆறு தென் மாநில பகுதிகளில் உள்ள 40 தேயிலைத் தோட்டங்கள் மற்றும் நிறுவனங்களில் இருந்து 133 வகையான தேயிலைத் தூள் போட்டியில் இடம்பெற்றன. பிரபல தேயிலை நிறுவனங்களைச் சேர்ந்த கோஷி எம்.பனிக்கர், ஏ.நூர் முகமது, தாமஸ் மேத்யூஸ் ஆகியோர் நடுவர்களாக இருந்து, தேயிலைத் தூளின் மணம், தரம், குணத்தை ஆய்வு செய்தனர்.

‘கோல்டன் லீப் இந்தியா’ விருது கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் அருண்குமார் கூறும்போது ‘‘போட்டியில் பங்கு பெறும் தேயிலைத் தூளுக்கு உள்நாட்டு, ஏற்றுமதி சந்தையை ஏற்படுத்த சிறப்பு ஏலம் நடத்தப்படவுள்ளது. நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள தேயிலை ஏல மையங்கள் மூலம் வர்த்தகர்கள் ஏலத்தில் பங்கேற்று, தேயிலைத் தூளை வாங்கலாம். இதுதவிர, சர்வதேச அளவில் உள்ள பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கும் தேயிலைத் தூளின் மாதிரிகள் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம், சர்வதேச சந்தையிலும் தென்னிந்திய தேயிலைத் தூளை விற்க வாய்ப்பு கிடைக்கும்’’ என்றார்.

SCROLL FOR NEXT