செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் அமைந்துள்ள தண்டரையில் உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.சுந்தரவதனம் ஆய்வு செய்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் தாம்பரம், சோழிங்கநல்லூர், பல்லாவரம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தாம்பரத்தில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எண்ணப்படுகின்றன. இந்த மையத்தின் பாதுகாப்பை சென்னை மாநகர போலீஸார் கவனித்து வருகின்றனர்.
அதேபோல் செங்கல்பட்டு, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் தண்டரையில் உள்ள ஆசான் நினைவு பொறியியல் கல்லூரியிலும், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் மதுராந்தகம் அருகே நெல்வாய் கூட்டு சாலையில் உள்ள ஏசிடி பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றியும், வாக்கு எண்ணும் மையத்தின் உள்ளேயும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ. சுந்தரவதனம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்களும், அவர்கள் முறையான அனுமதி பெற்றுள்ளார்களா என்பதை விசாரித்த பின்னரே அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மத்திய ஆயுதப்படை தமிழ்நாடு காவல் துறை, செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை மொத்தம் 228 பேர் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையத்துக்குள்ளே வரவும், வெளியே செல்லவும் உள்ள வழிகள் குறித்தும் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்தும் காவல்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.