மத்திய அரசு உர விலை உயர்வை முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:
மத்திய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உரங்களுக்கு மானிய விலை கொடுத்ததால் விசாயிகள் எந்தவித தொல்லையும் இல்லாமல் இருந்தனர். உரங்களின் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்தது. ஆனால் இப்போது உரத்தின் விலை விண்ணை எட்டியிருக்கிறது.
ஏற்கெனவே மத்திய அரசு கொடுத்த மானியத் திட்டத்தை படிப்படியாக குறைத்து, மானியத் தொகையையும் குறைத்துவிட்டார்கள். 2020-21 பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்த உரத்துக்கான மானியத் தொகை தற்போது ரூ.84 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு உரத்துக்கான மானியத் தொகை குறைந்த அளவில் சென்றடைகிறது.
ஏற்கெனவே மத்திய அரசின் அதிகாரத்தில் இருந்த உர விலை நிர்ணயத்தை தற்போது உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கே கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதால் அதிகப்படியான விலையை உயரத்தியுள்ளனர். இதனால் விவசாயிகள் பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் உரத் தொழிற்சாலைகள் தங்களுடைய இஷ்டம்போல் உர விலையை உயர்த்தினால் விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள்.
ஒருபுறம் விவசாய இடுபொருட்கள், உரம், டீசல் விலை உயர்ந்துள்ளது. மற்றொருபுறம் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு தகுந்த விலை கிடைக்கவில்லை.
பிரதமர் மோடி ஒவ்வொரு கூட்டத்திலும் பேசும்போது, நாங்கள் விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை கொடுக்கும் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று கூறுகிறார். ஆனால் உரிய விலையே கிடைக்காத நிலை இப்போது ஏற்பட்டிருக்கிறது. இது விவசாயிகளுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை கொண்டு வந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டு, பலகோடி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். வெளி மார்க்கெட்டில் நெல், மணிலா என விவசாயிகள் விளைவிக்கின்ற அனைத்து பொருட்களின் விலைகளும் குறைந்துள்ள சமயத்தில், உர விலை உயர்வு மிகப்பெரிய சுமையை விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே மத்திய அரசு உடனே தலையிட்டு உர விலை உயர்வை முழுவதும் ரத்து செய்து, பழைய விலையிலேயே விவசாயிகளுக்கு உரம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் இதில் தலையிட்டு வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
2020-21 பட்ஜெட்டில் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் கோடியாக இருந்த உரத்துக்கான மானியத் தொகை தற்போது ரூ.84 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டு, ரூ.50 ஆயிரம் கோடி எடுக்கப்பட்டுவிட்டது.