மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்கில் தீர்வு காணப்பட்டவருக்கான சான்றிதழை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் வழங்குகிறார். 
தமிழகம்

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 4,489 வழக்குகளுக்கு தீர்வு

செய்திப்பிரிவு

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, புது டெல்லி மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு சென்னை உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி, தேசிய மக்கள் நீதிமன்றம் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நேற்று நடைபெற்றது.

வழக்காடிகள் சமாதான முறையில் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு கண்டால் நீதிமன்ற கட்டணம் செலுத்த தேவை இல்லை, சமாதான தீர்ப்பில் இரு தரப்பும் வெற்றி பெறுவதால் மேல்முறையீடு இல்லை என்பது மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு.

இதை முன் நிறுத்தி கடலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி தலைமையில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் மாற்றும் சார்பு நீதிபதி ஜோதி வரவேற்று பேசினார்.

கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி செந்தில்குமார், நிரந்தர மக்கள் நீதி மன்றத்தின் தலைவர் மற்றும் மாவட்ட நீதிபதி செம்மல், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி எழிலரசி, எஸ்சி, எஸ்டி நீதிமன்ற நீதிபதி உத்தமராஜ், மகளிர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு இயல்புகள் குறித்து பேசினர்.

தொடர்ந்து ஏனைய நீதிபதிகள் முன்னிலையில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் கடலூர் மாவட்ட பார் அசோசியேஷன் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார் மற்றும் லாயர்ஸ் அசோசியேஷன்ஸ் சங்க தலைவர் சிவராஜ், செயலாளர் வனராசு மற்றும் உறுப்பினர் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்,

மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள்,

சிவில் வழக்குகள், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள், பண மோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகள் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், திட்டக்குடி மற்றும் விருத்தாசலம், நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட அளவில் 3,438 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு 2,383 வழக்குகளுக்கு தீர்வு செய்யப்பட்டு, ரூ. 27 கோடியே 44 லட்சத்து 06 ஆயிரத்து 981- தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

இதே போல் விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில், 1,090 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு குறித்து நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் எடுத்துரைத்தனர். சிவில் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், செக் மோசடி வழக்குகள், குற்றவியல் வழக்குகள் என பலதரப்பட்ட வழக்குக ளுக்கு சமரச முறையில் தீர்வு காணப் பட்டது. நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் உள்ள சமரசம் செய்யத் தக்க காசோலை பிரச்சினை சம்பந்தமான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட 787 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 450 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, 9 கோடியே 13 லட்சத்து 46 ஆயிரத்து 240 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

இதே போல திண்டிவனம் வட்ட சட்ட பணிகள் குழு ஆணை தலைவரும், முதன்மை சார்பு நீதிபதியுமான ராஜசிம்ம வர்மன் தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன வழக்குகள், சிவில் வழக்குகள் என 114 வழக்குகள் தீர்வுக்காணப்பட்டதில் 1 கோடியே 40 லட்சத்து 24 ஆயிரத்து 630க்கு தீர்வு காணப்பட்டது.

வானூர் நீதிமன்றத்தில் நீதிபதி வனஜா தலைமையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் குற்றவழக்குகள், சிவில் வழக்குகள் உள்ளிட்ட 50 வழக்குகள் விசாரிக்கப்பட்டு ரூ 1,69,400 க்கு தீர்வு காணப்பட்டது.

மொத்தத்தில் விழுப்புரம் மாவட் டத்தில் நேற்று நடந்த இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் 1,051வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ 12 கோடியே 32 லட்சத்து 44 ஆயிரத்து 832 க்கான தொகைக்கு தீர்வு காணப்பட்டது.

சமாதான தீர்ப்பில் இருதரப்பும் வெற்றி பெறுவதால் மேல்முறையீடு இல்லை என்பது மக்கள் நீதிமன்றத்தின் சிறப்பு.

SCROLL FOR NEXT