சேத்தியாத்தோப்பு அருகே பாழ்வாய்க்கால் பகுதியில் உணவகம் வைத்து நடத்தி வரும் வேணு,ராமானுஜம் தம்பதி. 
தமிழகம்

தள்ளாத வயதிலும் தளர்ந்து போகவில்லை

க.ரமேஷ்

‘உழைத்து உண்பதில் இருக்கும்சுகம், சுரண்டி சுகம் காண்பதில் இல்லை’ உணர்ந்த வர்களுக்கு அது தெரியும்.

கால் வயிற்றுக் கஞ்சியேனும் கடைசி காலம் மட்டிலும் தனது உழைப்பில் அதை பெற வேண்டும் என்ற உறுதியோடு இருப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள்.

அதற்கு ஆகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்து வருகின்றனர் சேத்தியாத்தோப்பு பாழ்வாய்க்கால் பகுதியில் தேநீர் கடை நடத்தும் 80 வயதைக் கடந்த ஒரு தம்பதி.

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வேணு, அவரது மனைவி ராமானுஜம் தம்பதி தேநீர் கடை நடத்தி வருகின்றனர். வேணுவுக்கு 85 வயதாகிறது. அவரது மனைவி ராமானுஜம் அம்மா 81 வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இவர்களது கடையில் காலை நேரத்தில் இட்லி, பூரி உள்ளிட்டவைகள்; மதிய நேரத்தில் தயிர் சாதம், தக்காளி சாதம் விற்பனை செய்யப்படுகின்றன. தள்ளாடும் நிலையிலும் மன உறுதியுடன் தொடர்ந்து இருவரும் ஒருமித்து இக்கடையை நடத்தி, அதில் வரும் வருவாயைக் கொண்டு குடும்பத்தை கவனித்து வருகிறார்கள்.

இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி தருவதோடு, அவரது பணியை முடித்துக் கொள்வார்.

பாழ்வாய்க்கால் பகுதி மக்களுக்கு இந்த தாத்தா கடை நன்கு பிரசித்தம். அண்மையில், தேர்தல் பரப்புரையின் போது கட்சி பிரமுகர்கள் இந்தக் கடையின் எளிமை மற்றும் தரத்தை கேள்விப்பட்டு படையெடுக்க, கூடுதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது இந்த தம்பதியின் தளராத உழைப்பு., "எங்களுக்கு பிறந்தது 6 பொண்ணுங்க; ஒரு பையன் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. அவரவர் தேவைகள் அவரவர்க்கு சரியாக இருக்கிறது. எங்களுக்கும் எங்கள் கடையை தொடர்ந்து நடத்துவது பிடித்திருக்கிறது. காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம்; மாலை 6 மணி வரை கடையில் வியாபாரம் செய்வோம். அடுத்து ஓய்வு.

அடுத்த நாள் வேலை. நல்லாதான் இருக்கோம். என்றைக்கேனும் தீபாவளி, பொங்கல் மற்றும் பெரு மழை மாதிரியான நாட்கள்ல மட்டும் கடை திறக்காம இருந்துருப்போம். ஆனா, உடம்புக்கு முடியலன்னு ஒரு நாள் கூட கடைய திறக்கமா இருந்தது இல்லை. நம்மள நம்பி நாலு வாய் டீ குடிக்க வரும்; ஏதாச்சும் சாப்பிட வரும். அதுங்கள நினைச்சா அடைக்க மனசு வராது” என்கின்றனர் இருவரும்.

சேத்தியாத்தோப்பு பக்கம் போனால் பாழ்வாய்க்கல் கிராமத்திற்கு இந்த தாத்தா - பாட்டி கடைக்குச் சென்று ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாருங்கள்; உணவோடு சேர்ந்து உங்களுக்கு நன் நம்பிக்கை பிறக்கும்; இது நிச்சயம்.

காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து விடுவோம்; மாலை 6 மணி வரை கடையில் வியாபாரம் செய்வோம்.

SCROLL FOR NEXT