சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்டதால் ராட்டினத் தொழிலாளர்கள், நாடகக் கலைஞர்கள் என 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சித்திரைத் திருவிழா மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் வெகு விமரிசையாக நடத்தப்படும். இந்த சித்திரைத் திருவிழா மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில், வீரழகர் கோயிலில் நடக்கும். மேலும் திருவிழா நடக்கும் நாட்களில் வைகை ஆற்றில் ராட்டினம், ஆங்காங்கே மண்டகபடிதாரர்கள் சார்பில் நாடகம், கலைநிகழ்ச்சிகள் என ஊரே கலை கட்டும்.
கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் சித்திரைத் திருவிழா நிறுத்தப்பட்டது. இந்தாண்டாவது திருவிழா நடக்கும் என்ற நம்பிக்கையில் விழா ஏற்பாடுகள் நடந்து வந்தன. இந்நிலையில் நேற்று முதல் கரோனா தொற்றால் கோயில் விழாக்களுக்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மானாமதுரை சித்திரைத் திருவிழா 2-வது ஆண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ராட்டினம் தொழிலாளர்கள், நாடகக் கலைஞர்கள், கலைநிகழ்ச்சி நடத்துவோர் என 500-க்கும் மேற்பட்டோர் முழுமையாக வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்து மானாமதுரை ராட்டினம் தொழிலாளர்கள் கூறியதாவது: ஏற்கெனவே கடந்த ஆண்டு முழுவதும் கோயில் விழாக்கள் நடக்காமல் இருந்ததால் நாங்கள் உணவுக்கே திண்டாடினோம். கடன்களையும் அடைக்க முடியவில்லை. அதேபோல் இந்தாண்டும் தடை விதித்துள்ளதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கட்டுப்பாடுகளுடன் திருவிழா, கலைநிகழ்ச்சிகள் நடத்த அரசு அனுமதிக்க வேண்டும், என்றனர்.