மண்டேலா திரைப்படத்தில் மருத்துவ குல சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரத் தியாகி விஸ்வநாததாஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நடிகர் யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்த படத்தில் மருத்துவ குல சமுதாய மக்களை இழிவுப்படுத்தும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து, திருவண் ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் சரவணன் தலைமையில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அதில், “மருத்துவக் குல சமுதாய மக்களை இழிவுபடுத்தி மண்டேலா என்ற திரைப்படம் தயாரிக் கப்பட்டுள்ளது.
இந்த படம், தனியார் தொலைக்காட்சியில் கடந்த 4-ம் தேதி ஒலிபரப்பப்பட்டது. அதில், எங்கள் சமூகத்தை இழிவுப்படுத்தி உள்ளனர். மண்டேலா படத்தை திரையிடக்கூடாது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை கைது செய்ய வேண்டும். இந்த படத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் உள்ள 55 லட்சம் மருத்துவ குல சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
எனவே, தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.