ஓசூர் மலர் சந்தையில் உகாதி மற்றும் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு மல்லி, சாமந்தி, பட்டன்ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், பொங்கல் திருநாளுக்கு பிறகு கடந்த 3 மாதங்களாக மலர்களுக்கு உரிய விலையின்றி பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள் இந்த விலை உயர்வினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஓசூர். தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, பாகலூர், மத்திகிரி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இதமான தட்பவெட்பநிலை மற்றும் வளமான மண் காரணமாக ரோஜா, பட்டன்ரோஜா, மல்லி, சாமந்தி, கனகாம்பரம், செண்டு, சம்பங்கி மற்றும் அலங்காரப்பூக்களான கார்னேஷன், ஜெர்பரா உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இங்கு விளையும் வாசமிக்க தரமான மலர்களுக்கு உள்நாட்டில் மட்டு மின்றி வெளிநாடுகளிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது.
இப்பகுதியில் பசுமைக்குடில் அமைத்தும் மற்றும் திறந்த வெளியிலும் சொட்டுநீர் பாசன முறையில் ஆண்டு முழுவதும் மலர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது வரும் 13-ம் தேதி தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பு உகாதி மற்றும் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு காரணமாக மலர் களின் விலை இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மலர் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
இதுதொடர்பாக ஓசூர் மலர்ச்சந்தை வியாபாரி நாகராஜ் கூறுகையில், ‘‘ஓசூர் பகுதியில் நடப்பாண்டில் கடும் வெயில் காரணமாக மலர்களின் உற்பத்தி யில் 40 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் சந்தைக்கு மலர்கள் வரத்து குறைந்துள்ளன. தற்போது தெலுங்கு, கன்னட வருடப்பிறப்பு உகாதியும் அதற்கடுத்த நாள் தமிழ் புத்தாண்டு என விசேஷ நாட்கள் தொடர்ந்து வருவதால் மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் ஓசூர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.10 மற்றும் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட பட்டன் ரோஜாவின் விலை ரூ.120 முதல் ரூ.140 வரை உயர்ந்துள்ளது.
அதேபோல ரூ.120-க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூவின் விலை ரூ.300 முதல் ரூ.400 வரையும், முல்லை ரூ.250-லிருந்து ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.30-லிருந்து ரூ.60-க்கும், சாமந்தி ரூ.80-லிருந்து ரூ.160 வரையும் என அனைத்து மலர்களின் விலையும் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மலர்களின் விலை உகாதி, தமிழ் புத்தாண்டு தினத்தன்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.