நல்ல வெல்லத்திற்கு பதிலாக தரம் குறைந்த வெல்லத்தை விற்பனைக்கு அனுப்பிய நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியரிடமிருந்து இழப்பீட்டை வசூலிப்பது மட்டும் தண்டனை ஆகாது என்று கூறிய உயர் நீதிமன்றம், வழக்கைத் தள்ளுபடி செய்தது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வந்த மாரிமுத்து என்பவர் 11,440 பாக்கெட்டுகள் நல்ல வெல்லத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக தரம் குறைந்த வெல்லத்தை மாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு நடந்த இந்த முறைகேடு தொடர்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டு நிரூபணமானதால், 2 லட்சத்து 65 ஆயிரத்து 79 ரூபாயை மாரிமுத்துவிடம் வசூலிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மாரிமுத்து தொடர்ந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தான் செய்த தவறு முதல் முறை என்று கூட பரிசீலிக்கப்படாமல், பணி ஓய்வு காலப் பயன்கள் வழங்கப்படாமல் பணி ஓய்வு பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், உணவுப் பொருளில் கலப்படம் செய்த மாரிமுத்துவிடம் இழப்பீட்டை வசூலிப்பது மட்டும் போதுமான தண்டனையாக இல்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், மாரிமுத்துவின் செயல்பாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு மட்டும் இழப்பு ஏற்படுத்தியது மட்டும் இல்லாமல், அந்த வெல்லத்தை வாங்குபவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மாநிலம் முழுவதும் கலப்படப் பொருட்கள் மலிந்து கிடப்பதற்கு மனுதாரர் மாரிமுத்து போன்றவர்கள்தான் ஆணிவேராகச் செயல்படுவதாகத் தெரிவித்து, இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதை ரத்து செய்யக் கோரிய மாரிமுத்துவின் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.