கோவை, காரமடை வனச்சரகத்துக்குட்பட்ட மானார் பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று (ஏப்.9) மாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பசுங்கனிமேடு வனப்பகுதிக்குள் துர்நாற்றம் வீசியதை அறிந்து அங்கு சென்று பார்த்தபோது ஒரு ஆண் சிறுத்தை இறந்த நிலையில் கிடந்தது. முள்ளியில் இருந்து பரளிக்காடு செல்லும் வனச் சாலையில் வீரக்கல் பழங்குடியினர் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் இறந்து கிடந்த அந்தச் சிறுத்தையை மாவட்ட வன அலுவலர், உதவி வனப்பாதுகாவலர், வனச்சரகர், கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் ஆகியோர் இன்று காலை பார்வையிட்டனர்.
அப்போது சிறுத்தையின் வால்நுனி துண்டாகியும், இடது முன் காலின் நான்கு விரல்கள் நசுக்கப்பட்டும் இருந்தன. கழுத்துப் பகுதியில் ஆழமான ஒரு காயம் ஏற்பட்டு ரத்தம் வடிந்திருந்தது. அடிவயிற்றுப் பகுதியில் பலத்த அடிபட்டு தோல் கன்னிப் போயிருந்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "கழுத்துப் பகுதியில் 8 செ.மீ ஆழத்தில் காயம் இருந்தது. மார்பின் உள்ளே இருதயம் சிதைவுற்று ரத்தம் நிறைந்து காணப்பட்டது. வயிற்றுப் பகுதியிலும் ரத்தக் கசிவு காணப்பட்டது.
ஆய்வுக்காக சிறுத்தையின் உடல் மாதிரிகள் மருத்துவரால் சேகரிக்கப்பட்டுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் அனைவர் முன்னிலையிலும் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது. சாலையைக் கடக்க முயன்றபோது அதிவேகமாக வந்த ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டு சாலையில் இருந்து சிறிது தூரம் சென்று சிறுத்தை இறந்துள்ளதாக கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்றனர்.