''தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. கரோனா பரவலைத் தடுக்க அதிக எண்ணிக்கையில் ஆய்வுகளை நடத்த வேண்டும். எண்ணிக்கையை மறைக்காதீர்கள் என்று அறிவுறுத்தியுள்ளோம். நிலைமையை உணர்ந்து முகக்கவசம் அணியுங்கள்'' என்று சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள விக்டோரியா விடுதியில் கரோனா சிகிச்சை மையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. அதைத் தொடங்கி வைத்தபின் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:
“தலைமைச் செயலர் அறிக்கை விட்டுள்ளார். முதற்கட்டமாக சில அறிவிப்புகளை வெளியிடுகிறோம். முகக்கவசம் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சொல்கிறேன். கடைப்பிடிக்காதவர்களுக்கு அபராதம் போடுகிறோம். அதையும் மீறி கடைப்பிடிக்காவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கையை நோக்கித்தான் நகரவேண்டும். நோய் பரவுவது என்பதை மீறி ஒரு தனி மனிதரின் வாழ்க்கையை பாதிக்கிறது.
எல்லோரும் நான் சரியாக இருக்கிறேன், அடுத்தவர் சரி இல்லை என்கிற மனோபாவத்தில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தமிழகத்தில் அலை உருவாகியுள்ளது. அதை யாரும் மறுக்கவில்லை. இரண்டாவது அலை பரவியுள்ளது. அதை யாரும் மறுக்கவில்லை. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என்பதல்ல. அலை என்பது கூடுதலாக எண்ணிக்கை பதிவாகியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கு இந்தியா அளவில் பல மாநிலங்களில் கடந்த ஆண்டு உயர்ந்தபட்ச எண்ணிக்கையைத் தாண்டியுள்ளது. நல்லவேளை தமிழகம் அந்த நிலையை அடையவில்லை. இதில் கவுரவம் பார்க்க ஒன்றுமில்லை. எண்ணிக்கையைக் குறைக்கும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதே முக்கியம்.
இரட்டை மாறுபாடுள்ள கரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்த 20 மாதிரிகளை பெங்களூருவில் உள்ள இன்ஸ்டன் என்கிற நிறுவனத்துக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை முடிவுகள் வரவில்லை. தமிழகத்தில் 11 பேர் இங்கிலாந்து வகை தொற்று, ஒன்று தென் ஆப்ரிக்கா வகை, மற்றவை எல்லாம் உள்ளுக்குள் உள்ள வகை.
மகாராஷ்டிராவை எடுத்துக்கொண்டால் அங்கு இருக்கும் தொற்று முழுவதும் உள்ளுக்குள் இருக்கும் வகை இரட்டை உருமாற்றம் பெற்ற வைரஸ் ஆகும். அங்கு வரக்கூடிய அத்தனையும் உள்ளேயே இருக்கக்கூடிய வைரஸ். ஆனால் இங்கு நாம் தொடர்புள்ளவர்களைக் கண்டறிவதில் சற்று தவறவிட்டுவிட்டோம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அதனால்தான் தமிழகத்தில் ஒருவரைக் கண்ட பிடித்தால் குறைந்தது 20-லிருந்து 30 பேர் வரை தொடர்பில் உள்ளவர்களை கண்டறியச் சொல்லியிருக்கிறோம். நாம் பரிசோதனை எடுக்கிறோம், எடுத்து அது கூடுதலாக கூட வரும். 5,000 என்பது 6,000 ஆக வரும். வரட்டும். எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பதற்காக மாதிரிகள் எடுப்பதை குறைக்கக்கூடாது. மாதிரிகள் சரியாக எடுக்காமல் இருக்கக் கூடாது என்று அனைவருக்கும் கூறியுள்ளோம்.
நபரைப் பார்த்து, எண்ணிக்கையைப் பார்த்து தவிர்க்காதீர்கள் என்று மாவட்டந்தோறும் அறிவுறுத்தியுள்ளோம். கடந்த ஆண்டு முதலில் வூஹானிலிருந்து வந்தவர்களால் பரவியது. ஆனால், இப்போது நம்மில் ஒருவருக்குப் பரவுகிறது. அவர் மூலம் வீட்டிலுள்ள 10 பேருக்குப் பரவுகிறது. இதை நாம் தடுப்பதற்குப் பொதுமக்கள் இந்த நுண்கிருமியின் பரவலைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முகக்கவசம் அணிய வேண்டும். தொடர்ந்து 3 வாரம் முகக்கவசம் அணியும்போது அந்தத் தொடர்பு சங்கிலி அறுந்துவிடும்”.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.