அரியலூர் அண்ணா சிலை அருகே அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் இன்று (ஏப்.10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் அடுத்த சோகனூரில் தேர்தல் முன்விரோதம் காரணமாக தலித் இளைஞர்கள் சுரேஷ் மற்றும் அர்ஜூனன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும், உயிரிழந்த அவர்களது குடும்பத்துக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், குற்றவாளிகளை வன்கொடுமை மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின், மாவட்டச் செயலாளர் மு.செல்வநம்பி தலைமை வகித்தார். தொழிலாளர் விடுதலை முன்னணி மாநிலத் துணைச் செயலாளர் அன்பானந்தம், மாநிலத் துணைச் செயலாளர் (தேர்தல் பிரிவு) தனக்கொடி, அரியலூர் தொகுதி செயலாளர் மருதவாணன், ஜெயங்கொண்டம் தொகுதி செயலாளர் இலக்கியதாசன், அரியலூர் ஒன்றியச் செயலாளர்கள் உத்திராபதி, தங்கராசு, நகரச் செயலாளர் தலித்தாசன், செய்தித் தொடர்பாளர் சுதாகர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.