அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணைப் பணிகளை முடிக்க ஆணையத்துக்கு கூடுதலாக 3 மாதம் அவகாசம்வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக நீதிபதி கலையரசன் கூறும்போது, ‘‘சுரப்பா மீதான விசாரணை, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது பல்கலை. அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை 15 நாட்களில் முடித்து தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும். சுரப்பா பணி ஓய்வுபெற்று சென்றாலும் விசாரணைக்கு அழைத்தால் கட்டாயமாக நேரில் ஆஜராக வேண்டும்’’ என்றார். சுரப்பாவின் பதவிக் காலம் நாளை (ஏப்.11) முடிகிறது.