சேலம் அரசு மருத்துவமனையில் முதல்வர் பழனிசாமி இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். 
தமிழகம்

கரோனா 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது: 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல்வர் பழனிசாமி தகவல்

செய்திப்பிரிவு

அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது என்றுமுதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

முதல்வர் பழனிசாமி, கரோனா தடுப்பூசி முதல் டோஸ் சென்னையில் கடந்த மார்ச் 11-ம் தேதி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இந்நிலையில், 2-வது டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு நேற்று சென்றார். அங்கு அவருக்கு ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர், மருத்துவ குழுவினர் 2-வது டோஸ் கரோனா தடுப்பூசியை முதல்வருக்கு செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 15 ஆயிரத்து 385 பேர். இதில், குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 415. 30,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றால் 12,840 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இதுவரை 2 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரம் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 260 கரோனா பரிசோதனை மையங்கள் செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் 85 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 95.31 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்துக்கு இதுவரை 54 லட்சத்து 85 ஆயிரத்து 760 தடுப்பூசிகள் வந்துள்ளன. 34,87,036 பேர் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தப்படுகிறது. மருந்துகள், உபகரணங்கள், முகக்கவசம் உள்ளிட்டவை போதுமான அளவு உள்ளது. அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகளை, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அரசு அறிவித்துள்ள கரோனா தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றினால் முழு ஊரடங்கு வராது. நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதற்கு தக்கவாறு மருத்துவ நிபுணர்கள் கருத்து கேட்டு, அரசு தக்க நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

உத்தமபாளையம் பயணம்

இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் வள்ளியம்மாள் (92) காலமானதையடுத்து ஆறுதல் கூற முதல்வர் பழனிசாமி இன்று உத்தமபாளையம் செல்கிறார். இதற்காக சேலத்தில் இருந்து காலை 8 மணிக்கு காரில் கிளம்பும் முதல்வர், உத்தமபாளையம் வந்து விட்டு மதுரையிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு விமானம் மூலம் சென்னை செல்ல உள்ளார் என போலீஸார் தெரிவித்தனர்

நேற்று முன்தினம் வள்ளியம்மாளின் உடல் உத்தமபாளையம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார், செல்லூர் ராஜூ, முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினர்.

SCROLL FOR NEXT