தமிழகம்

தமிழகத்தின் ஊழல் முகத்தை மாற்ற பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் : பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

தமிழகத்தின் ஊழல் முகத்தை மாற்ற இங்கு பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் ராம்லால் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினமாக கொண்டாடும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் ராம் லால் பங்கேற்று பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு நல்லாட்சி மிகவும் முக்கியம். நிர்வாகத்தில் நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது, அடித்தட்டு மக்களின் வளர்ச்சியை உறுதி செய் வது, நலத்திட்டங்களை குறித்த காலத்தில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது ஆகிய அம்சங் களைக் கொண்டதுதான் நல்லாட்சி. இதை பாஜக அரசு வழங்கி வருகிறது.

அதனால் இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக கூட்டணி அரசுகள் ஆட்சியமைத்துள்ளன. அதிக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் பாஜகவினராக உள்ளனர். பாஜக ஆளும் சத்தீஸ்கர் மாநிலத் தில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டம், மத்தியப் பிரதேசத்தில் அமலில் உள்ள பெண் குழந்தைகளுக்கான திட்டம் ஆகியவை நாட்டுக்கே முன்மாதிரி திட்டங்களாக உள்ளன.

குஜராத் மாநிலம், வளர்ச்சி, நிர்வாகம், நலத்திட்டம் உள்ளிட்ட வற்றுக்கு முன்மாதிரியாக உள்ளது. ஆனால் தமிழகம் ஊழலுக்குத்தான் முன் மாதிரியாக உள்ளது. தமிழகத்தின் இந்த ஊழல் முகத்தை மாற்ற இங்கு பாஜக ஆட்சிக்கு வர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், கட்சியின் தேசிய பொதுச்செயலர் முரளிதரராவ், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணைத் தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT