தமிழகம்

ரயில் பயணத்தின்போது பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயம்: தெற்கு ரயில்வே பொதுமேலாளர் அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ரயில் பயணத்தின்போது பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தொடர்பாக தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

கரோனா பாதிப்புள்ள இந்தக் காலத்தில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள ரயில்வேயின் அறிவுறுத்தல்படி, தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தெற்கு ரயில்வேயில் மொத்தமுள்ள ரயில்களில் 75 சதவீத பயணிகள் ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. தேவைப்பட்டால் கூடுதல் ரயில்களை இயக்குவது குறித்து பிறகு அறிவிக்கப்படும்.

மின்சார ரயில்களில் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும். பயணிகளுக்கு ஏற்கெனவே இருக்கும் நேரக்கட்டுப்பாடுகள் தொடரும். பயணிகள் ரயில் நிலையங்கள், ரயில்களில் செல்லும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால் ரயில்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். சமூக வலைதளங்களில் பரவும் போலி தகவல்கள் யாரும் நம்ப வேண்டாம். பயணிகளுக்கான அதிகாரப்பூர்வமான தகவல்களை ரயில்வே அறிவிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வின்போது தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பி.ஜி.மல்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT