அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இது வரையில் 8,795 பேருக்கு தடுப் பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் வகையில் சேவை துறையில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிவரும் 1.43 லட்சம் பேருக்கு முதல் தவணையாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது, 45 வயதுக்கும் மேற்பட்ட ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியாளர்களை கணக்கெடுத்து, அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளைக் கண்காணிக்க தனிஅலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
யாரையும் கட்டாயப்படுத்தவில்லை
இதுதொடர்பாக போக்குவ ரத்து துறை செயலாளர் சி.சமயமூர்த்தி கூறியதாவது:
போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டுகரோனா தடுப்பூசி போடும்பணிகள் நடைபெற்று வருகின்றன. யாரையும் கட்டாயப்படுத் தவில்லை. ஆனால், கரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி, போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். இதற்கான, ஏற்பாடுகளை அந்தந்த போக்குவரத்து கழக மண்டல அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு போக்குவரத்து கழகங்களில் 45 வயதுக்கும் மேற்பட்டோர் 70,677 பேர் பணியாற்றி வருகின்றனர். இதுவரையில் 8,795 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் அதிகபட்சமாக 2,951 பேரும் கும்பகோணத்தில் 1,892 பேரும் தடுப்பூசி கொண்டுள்ளனர். படிப்படியாக மற்ற ஊழியர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டுமென அறிவுறுத்தி வருகிறோம். இவ்வாறு தெரிவித்தார்.