இந்து கோயில்களில் 2016 ஜன. 1 புத்தாண்டு தினம் முதல் பக்தர் களுக்கு ஆடை கட்டுப்பாடுகள் விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் மருங்காபுரி பழையபாளையம் அக்கியம்பட்டி யில் உள்ள செண்பக விநாயகர் கோயில் விழாவில் கிராமிய இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நவ. 20-ம் தேதி விசாரித்த உயர் நீதிமன்றம்,
கிரா மிய இசை நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கியதுடன், இந்து கோயில் களுக்கு வரும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்தும், கோயில் திருவிழாவில் நிபந் தனைகள் கடைப்பிடிக்கப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பான விசாரணை யின்போது நேற்று நீதிபதி எஸ். வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:
அனைத்து மதங்களும் சுத்தம், நாகரிகம் மற்றும் கோயில்களுக்கு செல்லும்போது ஒழுக்கமான ஆடைகள் அணிய வேண்டும் என்பதை கற்பிக்கிறது. கிறிஸ் தவம், இஸ்லாமிய மதங்களிலும் வழிபாட்டுக்கு செல்லும் போது தனி ஆடை கட்டுப்பாடு உள்ளது. இவற்றை மனதில் வைத்து தமிழகத் தில் இந்து கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக அறநிலையத்துறை விரைவில் முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் இந்து கோயில்களில் 1.1.2016 முதல் ஆண்கள் மேலாடையுடன் வேஷ்டி, பைஜாமா, வழக்கமான பேன்ட் மற்றும் சட்டை, பெண்கள் சேலை, தாவணி, மேலாடையுடன் கூடிய சுடிதார், குழந்தைகள் முழுமையாக மூடப்பட்ட ஏதாவது ஒரு ஆடை அணிந்தும், போலீஸார், தீயணைப்பு துறையினர், மீட்பு படையினர் மற்றும் பாதுகாவலர்கள் அவர்களின் சீருடையுடன் வர அனுமதிக்க வேண்டும். இந்த ஆடை கட்டுப்பாட்டினை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து கோயில்களுக்கும் அறநிலையத் துறை கடிதம் அனுப்ப வேண்டும்.
திருச்செந்தூர் உள்ளிட்ட பல கோயில்களில் ஆண்கள் மேலாடை அணிந்து வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆடை கட்டுப்பாடு தொடர்பாக அரசு முடிவெடுக்கும் வரை இந்த முறை தொடரலாம். அறநிலையத் துறைக்கு கட்டுப்படாத கோயில்களில் அவர்களின் பாரம்பரிய ஆடை கட்டுப்பாடுகள் அமல்படுத்த வேண்டும். மேற்சொன்ன ஆடைகள் அல்லாமல் வேறு ஆடைகள் அணிந்து வரும் பக்தர்களை கோயில்களுக்குள் போலீஸார் அனுமதிக்கக் கூடாது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.