கனிமவளக் கொள்ளை நடைபெற்ற பிறகு அபராதம் விதிக்காமல், முன்கூட்டியே கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் பரமக்குடியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''பரமக்குடி தாலுக்கா சொடையூரில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சொடையூர் கண்மாய் நீரைப் பயன்படுத்தி இங்கு விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த கண்மாய்க்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீர் வரும். 2018-ல் சொடையூர் கண்மாய் பகுதியில் கிராவல் மண்குவாரி நடத்த ஜெயப்பிரகாஷ் என்பவர் உரிமம் பெற்றார். பின்னர் குவாரியில் கூடுதல் ஆட்சியர் ஆய்வு நடத்தியபோது, முறைகேடு நடைபெற்றிருப்பது தெரியவந்ததால் உரிமம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அதே ஜெயப்பிரகாஷ், மதுரையைச் சேர்ந்த வினோத் என்பவரின் பெயரில் 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஆகஸ்ட் மாதம் வரை குவாரி உரிமம் பெற்று சொடையூர் கண்மாய் பகுதியில் கிராவல் மண் எடுத்து வருகிறார்.
இந்த குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருகிறது. கண்மாய் மற்றும் அதனை நம்பியிருக்கும் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குவாரி நடத்த இடைக்காலத் தடை விதித்தும், சட்டவிரோதமாக குவாரி நடத்தி வருவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ''கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும்போது கொள்ளை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்யாமல் கொள்ளையடிக்கப்பட்ட பிறகு அபராதம் விதிக்கப்படுவதுதான் நடைபெறுகிறது.
குவாரி நடத்துவதற்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா? சட்டவிரோதமாக கனிமவளக் கொள்ளை நடைபெற்றுள்ளதா? என்பது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 3 நாளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தனர்.