உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுக-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், கரோனா தாக்கத்தைச் சுட்டிக்காட்டி உட்கட்சித் தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதிமுக பாஜக, சிபிஐ (எம்) போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தி, அதற்குரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் வரை சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தடை விதிக்கக்கோரி, திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (ஏப். 09) விசாரணைக்கு வந்த போது, உட்கட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அதிமுக-வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், கரோனா தாக்கத்தைச் சுட்டிக்காட்டி உட்கட்சித் தேர்தல் நடத்த அதிமுக தரப்பில் அவகாசம் கோரப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து விட்டதால், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.