அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே ஆட்டோவுடம், ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், 2 பெண்கள் உயிரிழந்தனர்.
அரியலூர் அருகேயுள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் தனது குடும்பத்தினருடன் உடையார்பாளையம் பெரிய கோயிலுக்கு செல்வதற்காக இன்று (ஏப். 09) காலை வி.கைகாட்டியில் இருந்து ஒரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
ஆட்டோவை சுண்டக்குடியை சேர்ந்த சிற்றரசு என்பவர் ஓட்டிச் சென்றார். உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது, ஜெயங்கொண்டத்திலிருந்த வந்த ஆம்னி வேன், ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், மணிகண்டன் தாயார் சந்திரா (55) மற்றும் பக்கத்து வீட்டு மூதாட்டி பவுனம்மாள் (70) ஆகியோர் படுகாயமடைந்து அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மணிகண்டன்,சிற்றரசு மற்றும் ஆம்னி வேனில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த உடையார்பாளையம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகவும், இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அனுப்பிவைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.