தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் குறைந்த அளவாக 59.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ‘‘மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சென்னையில் 100 சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும்’’ என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.
எழுத்தறிவு கொண்டவர்கள் நிறைந்த சென்னைமாவட்டத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் மற்ற மாவட்டங்களைவிட வாக்குப்பதிவு சதவீதம் குறைவாகவே உள்ளது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் 55.27 சதவீதம், 2019 மக்களவைத் தேர்தலில் வட சென்னை, மத்திய சென்னை, தென்சென்னை ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளும் சேர்த்து 59.50 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் சென்னை மாவட்டத்தில் 59.10 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன.
முந்தைய காலங்களில் உயிரிழந்தோர், வீடு மாறியோர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாமல் இருந்தன. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக நடத்திய சோதனையில், அத்தகைய நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. சொந்த ஊரில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும், சென்னையில் வசிக்கும் இடத்திலும் பலர் வாக்காளர் அட்டை வைத்திருந்தனர்.
இதைத் தடுக்க தேர்தல் ஆணையம் சார்பில் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட இஆர்ஓநெட் (https://eronet.ecinet.in) என்ற இணையதளம் வழியாக முகவரி, புகைப்பட ஒற்றுமை அடிப்படையிலும் இரு இடங்களில் வாக்காளர் அட்டை வைத்திருந்தது கண்டுபிடித்து நீக்கப்பட்டன. அதன் பிறகும் வாக்கு சதவீதம் உயராதது தேர்தல் அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இதற்கிடையே, வாக்களிக்க விரும்பாத சிலர் கூறியதாவது: தலைமை தேர்தல் ஆணையரின் அதிகாரங்கள், தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றை நீர்த்துபோக செய்வதற்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் ஆதரவாக இருந்தனர். மக்களின் குரலாக மக்களவையில் ஒலிக்கிறோம் என கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளின் சுயநலத்துக்காக மக்களுக்கு எதிரான மசோதாக்களுக்கு வாக்களிக்கின்றனர்.
தமிழக சட்டப்பேரவையில் மக்களுக்கு எதிரானஒரு சட்டத்தை கொண்டுவரும்போது, அதை எதிர்க்குமாறு மக்கள் சொன்னாலும், அரசு கொறடாவின் உத்தரவைத்தான் ஒரு ஆளுங்கட்சி எம்எல்ஏ கேட்கமுடியும். தேர்ந்தெடுத்த மக்களின் கோரிக்கைப்படி வாக்களித்தால் அவரது எம்எல்ஏ பதவி பறிபோகும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது மக்களின் உரிமையை நசுக்குவதாக உள்ளது.
அண்மைக்காலமாக எம்எல்ஏக்கள், எம்பிக்கள்,தேர்தலுக்குப் பிறகு மக்களை நாடி வருவதும், அவர்களின் குறைகளைக் கேட்பதும், தீர்ப்பதும் குறைந்துவிட்டது. நாம் வாக்களிப்பதால், அரசியல்வாதிகளுக்குத்தான் நன்மை. மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அதனாலேயே வாக்களிக்க செல்லவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னை மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது:
சென்னை வரலாற்றில் நீண்ட காலமாகவே வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தே இருக்கிறது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பெருநகரங்களிலும் இதேநிலைதான். கரோனா பரவல் காரணமாக சொந்தஊர்களுக்குச் சென்று வீட்டிலிருந்தபடி வேலைசெய்பவர்களில் பலரது பெயர் சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. அவர்களால் வாக்களிக்க முடியவில்லை. சிலர் கரோனா அச்சத்தாலும், அலட்சியத்தாலும் வாக்களிக்க வராமல் இருந்திருக்கலாம். வரும் காலங்களில் வாக்காளர் விழிப்புணர்வில் கூடுதல் கவனம்செலுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபாலசுவாமி கூறும்போது, ‘‘சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து குறைந்தே பதிவாகிவருவதற்கு, மக்களின் சோம்பேறித்தனமும், அலட்சியமும்தான் முக்கிய காரணம். தற்போது, கரோனாஒரு சாக்காக அவர்களுக்கு அமைந்துவிட்டது. தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நடத்த முடியும், விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். வாக்காளர்கள்தான் வாக்களிக்க முன்வரவேண்டும். வராதவர்களை எதுவும் செய்ய முடியாது. அவர்கள்மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே சென்னையில் 100 சதவீதம் வாக்குப்பதிவு சாத்தியமாகும். சட்டங்களை அரசியல்வாதிகள் நீர்த்துபோகச் செய்வதால் வாக்களிக்க வரவில்லை என்று கூறுபவர்கள், நல்லவர்களை தேர்ந்தெடுத்து அனுப்பவாவது வாக்களிக்க வர வேண்டும்’’ என்றார்.