மாம்பழ சீசன் தொடங்கும் நேரத்தில்கரோனா கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டைபோல் மீண்டும் சந்தைகளில் மாங்காய் விற்பனை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் 1 லட்சத்து 25 ஆயிரம் ஹெக்டேரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்சம் டன் மாங்காய் உற்பத்தியாகின்றன.
மதுரையில் 7 ஆயிரம் ஹெக்டேரில் மானாவாரியாகவும், 400 ஹெக்டேரில் அடர் நடவு முறையிலும் மா விவசாயம் நடைபெற்று வருகிறது. செந்தூரா, காசா, கல்லாமை (பெங்களூரா), பங்கனப்பள்ளி, மல்கோவா ஆகிய மாம்பழ வகைகளுக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது. மதுரையில் இந்த ரகங்கள் மட்டுமின்றி உள்ளூர் ரகங்களையும் விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். தற்போது மாமரங்களில் மாங்காய்கள் காய்த்துக் குலுங்குகின்றன. ஏப்ரல் 2-வது வாரத்தில் மா சீசன் களைகட்டத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்று வேகமாக பரவுதால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில், திருவிழாக்கள், சந்தைகளுக்கு முன்புபோல் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே நேரத்தில் கரோனா ஊரடங்கால் மா மரங்களில் மகசூல் அதிகமாக இருந்தும், அதை உரிய விலைக்கு விற்க முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு வருவாய் குறைந்தது.
இந்த ஆண்டு சீசனிலாவது போதிய வருவாய் பெறலாம் எனவிவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் தற்போதும் சீசன் நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அழகர்கோவில் அருகே சாம்பிராணிப்பட்டியைச் சேர்ந்த மா விவசாயி கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
கடந்த ஆண்டு ஓரளவு மழைபெய்ததால் கிணறுகளில் போதிய தண்ணீர் இருக்கிறது. இதனால் மாமரங்களுக்கு தேவையான தண்ணீரை பாய்ச்சி பராமரித்து வருகிறோம். தற்போது மாமரங்களில் மாங்காய்கள் அதிகளவில் காய்த்துள்ளன. இன்னும் 2 வாரங்களில் சீசன் தொடங்க உள்ள நிலையில், தற்போது விழாக்களை நடத்தவும், சந்தைகளுக்கும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது மாம்பழங்களை விற்பனை செய்வதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
கடந்த ஆண்டு இதுபோல்கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மாம்பழங்களை விற்க முடியாமல் சிரமப்பட்டோம். இந்த ஆண்டு சீசனாவது கைகொடுக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில் கரோனா கட்டுப்பாடுகள் என்ற வடிவில் மீண்டும் சிரமத்தை சந்திக்க உள்ளோம் என்றார்.