தமிழகம்

வடகோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய நடைமேம்பாலம்: மேட்டுப்பாளையம் சாலை வரை நீட்டிக்கப்படுமா?

க.சக்திவேல்

வடகோவை ரயில்நிலையத்தில் அமைக்கப்பட்டுவரும் புதியநடைமேம்பாலத்தை மேட்டுப்பாளையம் சாலை வரை நீட்டிக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை ரயில் நிலையத்துக்கு தற்போது தினந்தோறும் 56 ரயில்கள் வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் ரயில்களில் இருந்து இறங்கி, தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்கின்றனர்.

இதனால், கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடி ஏற்பட்டுவருகிறது. இட நெருக்கடியை குறைக்கும் நோக்கில் வடகோவை ரயில் நிலையத்தில் சில ரயில்கள் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும் என ரயில்வே வாரியத்திடம் சேலம் கோட்டம் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ரயில்வே வாரியம் ஏற்றுக்கொண்டதால், வடகோவையில் ரயில்கள் நின்று செல்ல கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரியில் அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வடகோவை ரயில் நிலையத்தில் டிக்கெட் முன்பதிவு கவுன்ட்டரில் இருந்து நடைமேடைக்கு பயணிகள் நேரடியாகசெல்ல வசதியாக புதிதாகநடைமேம்பாலம் அமைக்கப்பட்டுவருகிறது.

நடைமேடை வரை மட்டும் இந்த பாலம் அமைக்கப்பட்டால் பெரிய பயன் இல்லை என்கின்றனர், பயணிகள். இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “வடகோவை ரயில்நிலையத்தில் தற்போது பயணிகள் ரயில்கள் உட்பட மொத்தம் 6 ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. கூடுதலாக ரயில்கள் நின்று சென்றாலும் பயணிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க அங்கு போதுமான இடம் உள்ளது. இருப்பினும், வடகோவை ரயில்நிலையம் இன்னும் மேம்படுத்தப்படாமலேயே உள்ளது.

மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து வடகோவை ரயில் நிலையத்தை அடைய நேரடியாக சாலை இல்லாததால் சுற்றிவர வேண்டியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுவரும் நடைமேம்பாலத்தை மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் நீட்டித்தால் பயணிகள் அதிக பலன்பெறுவார்கள்” என்றனர்.

கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கூறும்போது, “வடகோவை ரயில்நிலையத்தை மேம்படுத்தி கூடுதல் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுத்தால் கோவை ரயில்நிலையத்துக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதோடு, இடநெருக்கடியும் தவிர்க்கப்படும். இதன்மூலம் வடகோவை ரயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்களும், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஊர்களுக்கு செல்வோரும் பயனடைவார்கள். அவர்கள் கோவை ரயில்நிலையம் சென்று மீண்டும் அதேவழியில் திரும்பிவர வேண்டிய தேவை இருக்காது” என்றார்.

SCROLL FOR NEXT