சென்னையில் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட இடங்களில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகளை ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னை, புறநகரில் மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட இடங்களில் ராணுவத்தின் முப்படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புக் குழு வினரும் இந்தப் பணியில் ஈடுபடுத் தப்பட்டனர்.
இந்நிலையில், சென்னை வந்துள்ள ராணுவ தலைமைத் தளபதி தல்பீர் சிங், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேற்று ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் மீட்பு, நிவாரணப் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சென்னையில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 5,500 பேரை ராணு வத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தற்போது ராணுவத்தின் மீட்பு, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த 50 குழுக்கள் தாம்பரம், ஊரப்பாக்கம், மண்ணிவாக்கம், முடிச்சூர், தி.நகர், கோட்டூர்புரம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. மாநில அரசு கூறும்வரை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய் பரவாமல் தடுப்பதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்களில் தேவையான மருத்துவ வசதிகள் செய்யப் பட்டுள்ளன. மீட்புப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் வீரர்கள் தேவைப்பட்டால் அனுப்பவும் ராணுவம் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு தல்பீர் சிங் கூறினார்.