சென்னையில் கரோனா தடுப்புபணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடு வீடாகச் சென்று கரோனாஅறிகுறிகள் உள்ளதா என ஆய்வுசெய்யும் பணிகளை களப்பணியாளர்கள் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்து57 ஆயிரத்து 851 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் புதிதாக 1,520பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11,633 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, மீண்டும் வீடு வீடாகச் சென்று காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என ஆய்வு செய்யும் களப் பணியாளர்களை மாநகராட்சி நிர்வாகம்பணியமர்த்தியுள்ளது. அவர்களும் தற்போது வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது தேர்தல் முடிந்தநிலையில், கரோனா தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள 39 ஆயிரம் தெருக்களில் தற்போது சுமார் 350 தெருக்களில்தான் தொற்று அதிகமாக உள்ளது. அப்பகுதிகளில் மீண்டும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், தொற்றுகண்டறிய மாதிரி கொடுத்து, பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பவர்கள் ஆகியோரை தனிமைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அவர்களின் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய சுமார் 6 ஆயிரம் களப் பணியாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட உள்ளனர். வீடு வீடாக காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளனவாஎன ஆய்வு செய்யவும், உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யவும் 2 ஆயிரம் களப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தற்போது தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் வீடு வீடாக ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர். இவர்கள் கண்டறியும் நபர்களை, காய்ச்சல் பரிசோதனை முகாம்களுக்கு கொண்டு வந்து, மருத்துவர்கள் மூலம் பரிசோதித்து, தேவைப்படின் மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணிகளையும் தீவிரப்படுத்தி வருகிறோம். சென்னையில் இதுவரை 8 லட்சத்து 60 ஆயிரத்து 160 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 7-ம் தேதி மட்டும் 16 ஆயிரத்து 66 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தடுப்பூசி மையங்களையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.