தமிழகம்

மீண்டும் அமல்படுத்தப்படும் கட்டுப்பாடுகள்; பங்குனி விழா தேரோட்டம் நடத்த வேண்டும்: கோவில்பட்டி பக்தர்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை காரணமாக தமிழகத்தில் மீண்டும் ஏப்ரல்.10-ம்தேதி முதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருவிழா, மத வழிபாடு கூட்டங்கள் நடத்த தடை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுவாக பங்குனி, சித்திரை மாதங்களில் கோயில் திருவிழாக்கள், தேரோட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். இதில், ராட்டினங்கள், தற்காலிக கடைகள் அமைக்கப்படுவதால் சிறு, குறு வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர்.

ஆனால், கடந்த ஆண்டு கரோனாபரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கோயில் திருவிழாக்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால், இந்தாண்டு தேர்தல் வரை எந்தவித அறிவிப்பும் இல்லாமல், தற்போது திருவிழா காலம்தொடங்கிய நிலையில், திருவிழாக்களுக்கு தடை விதித்திருப்பது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பங்குனி பெருந்திருவிழா

கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் பங்குனிபெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. இதில், ஏப்.13-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில், கோயில் பின்புறம் உள்ள காந்தி மைதானத்தில் ராட்டினங்கள், கடைகள் அமைக்கும் பணிகளை வியாபாரிகள் தொடங்கிவிட்டனர். தற்போது தடை விதிக்க நேர்ந்தால், தங்களுக்கு மிகப்பெரிய அளவில் நஷ்டம் ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

சிதையும் பாரம்பரியம்

இதுகுறித்து சண்முகசுந்தரம் என்பவர் கூறும்போது, “மது விற்பனைக்கும், பார்களுக்கும் எந்தவித தடையும் இல்லாத நிலையில், தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் கோயில் திருவிழாக்களை மட்டும் அரசு தடை செய்வது எந்தவிதத்தில் நியாயம். இதுபோன்ற அபத்தமான கட்டுப்பாடுகளால் தமிழர்களின் பாரம்பரியம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டு வருகிறது. எனவே, கட்டுப்பாடுகளுடன் கோயில் திருவிழாக்களை நடத்த அனுமதி வழங்க வேண்டும். பேருந்துகளில் அமர்ந்து சென்றால் பரவாத கரோனா, நின்று சென்றால் பரவிவிடுமா?. முரண்பாடுகள் களையப்பட வேண்டும்” என்றார்.

வியாபாரிகளுக்கு பாதிப்பு

வியாபாரிகள் கூறும்போது, “ஏற்கெனவே கடந்த ஓராண்டாக வியாபாரம் மோசமான நிலையில் தான் உள்ளது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதை இது காட்டுகிறது. ஆனால், மீண்டும் ஊரடங்கு, சில்லறை கடைகளுக்கு தடையென்றால், சிறு வியாபாரிகளின் நிலை பரிதாபகரமாக மாறிவிடும். கரோனா தடுப்புக்காக தடுப்பூசி கொண்டு வந்துள்ளனர். ஆனாலும், மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு என அமல்படுத்தினால் வியாபாரிகளின் நிலை மோசமாக மாறிவிடும்” என்றனர்.

SCROLL FOR NEXT